பவதாரிணி நினைவாக அவரது பெயரில் ‘சிறுமிகள் ஆர்கெஸ்ட்ரா குழு’ தொடங்கவுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி தனது 47வது வயதில் கடந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி காலமானார்.
அவர் மறைந்து ஓராண்டாகியிருக்கும் நிலையில் பவதாரிணி நினைவாக அவரது பெயரில் ‘சிறுமிகள் ஆர்கெஸ்ட்ரா குழு’ தொடங்கவுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்திருக்கிறார்.
நேற்று பவதாரிணியின் நினைவு நாள் நிகழ்வு சென்னை மியூசிக் அகடாமியில் நடைபெற்றது. இதில் இளையராஜா, கங்கை அமரன், கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு என இளையராஜாவின் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டிருந்தனர். பவதாரிணி பாடிய பாடல்களின் கச்சேரி நடத்தப்பட்டது.
இவ்விழாவில் பேசியிருக்கும் இளையராஜா, "பவதாரிணியின் பிறந்த நாள் இன்று. இந்த பிறந்த நாளிலேயே அவரின் 'திதி' நாளும் அமைந்திருக்கிறது. அவரின் ஆத்மா சாந்தியடைந்திருக்கிறது என்பதற்கான நல்ல உதாரணம் இது.
'சிறுமிகள் ஆர்கெஸ்ட்ரா குழுவை உருவாக்க வேண்டும் என்பது பவதாரிணியின் கடைசி ஆசை. 15 வயதிற்கு மேற்படாதவர்களுக்கு மட்டுமே இந்த ஆர்கெஸ்ட்ரா.
உலகின் எந்த மூலையிலிருந்து சிறுமிகள் வந்தாலும் இந்த ஆர்கெஸ்ட்ரா குழுவில் சேரலாம். இந்தக் குழுவில் சேர விரும்புபவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். இது பவதாரிணியின் நினைவாக உலகம் முழுவதும் பரவும்" என்று பேசியிருக்கிறார்.