லண்டனில் இசைஞானி இளையராஜா தனது நீண்ட நாள் கனவான சிம்பொனியை, இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு அரங்கேற்றினார்.
கடந்த ஆண்டு, தான் சிம்பொனி எழுதி வருவதாகவும் விரைவில் அதனை அரங்கேற்ற உள்ளதாகவும் இளையராஜா தனது ரசிகர்களுக்கு அறிவித்தார். இதற்காக இளையராஜா முழு மூச்சில் தீவிரமாக பணியாற்றி வந்தார். 35 நாள்களில் சிம்பொனியை எழுதி முடித்தார்.
இந்தநிலையில், கடந்த மார்ச் 6-ஆம் தேதி சென்னையில் இருந்து இளையராஜா லண்டன் சென்றார். வேலியன்ட் என்று பெயரிடப்பட்ட சிம்பொனியை லண்டனில் உள்ள ஈவன்டின் அப்பல்லோ அரங்கத்தில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12: 30 மணியளவில் இளையராஜா அரங்கேற்றினார். இந்த நிகழ்ச்சியை உலகின் மிகச்சிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ரா இசைத்தனர்.இசையை, மெய்மறந்து ரசிகர்கள் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் பால்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இளையராஜா மேடைக்கு வந்ததும் ரசிகர்களின் உற்சாக வரவேற்பால் அரங்கமே அதிர்ந்தது. ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிம்பொனி மட்டும் 45 நிமிடத்திற்கு அரங்கேற்றம் செய்யப்பட்டது.
மொத்தம் 3,665 இருக்கைகள் கொண்ட அரங்கத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தன. கடந்த இரண்டு நாட்களாகவே இளையராஜா ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அவர் தொடர்புடைய பதிவுகள், வீடியோக்கள் பலவற்றை பதிவேற்றி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.