சென்னையில் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி!

இளையராஜா
இளையராஜா
Published on

இளையராஜா லண்டனில் அரங்கேற்றிய சிம்பொனி இசையை சென்னையில் நிகழ்த்துவதாக அறிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா வேலியண்ட் எனப் பெயரிட்ட தன் சிம்பொனி இசையை லண்டனில் கடந்த மார்ச் மாதம் அரங்கேற்றம் செய்தார். ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா குழு இளையராஜாவின் இசைக்குறிப்புகளை வாசித்து அசத்தினர்.

இதனால், சிம்பொனியை எழுதி அதனை சர்வதேச அளவில் அரங்கேற்றிய ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருமையை இளையராஜா பெற்றார்.

இந்த நிலையில், இன்று தன் பிறந்த நாளை முன்னிட்டு இளையராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “லண்டனில் அரங்கேற்றிய சிம்பொனி இசையை என் மக்களும் கேட்க வேண்டும் என்பதற்காக, வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னையில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டிருக்கிறேன். லண்டனில் வாசித்தே ராயல் ஆர்கெஸ்ட்ரா குழுவினரே இங்கு வந்து வாசிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

இது இசை ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் இளையராஜாவின் சிம்பொனியைக் கேட்க மிகுந்த ஆவலுடன் இருப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com