விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த நிலையில், அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி இன்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“உங்களின் சாதனைகள், மைல்கற்கள் குறித்துதான் எல்லோரும் பேசுவார்கள். ஆனால் நீங்கள் வெளியே காட்டிக் கொள்ளாத கண்ணீர், யாரும் பார்க்காத போராட்டங்கள், கிரிக்கெட் மீது நீங்கள் கொண்டுள்ள அளப்பரிய காதல் ஆகியவைதான் எப்போதும் எனது நினைவில் நிலைத்து நிற்கும்.
ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கு பிறகும் நீங்கள் கொஞ்சம் புத்திசாலித்தனத்துடனும் கொஞ்சம் அடக்கத்துடனும் திரும்பி வந்தீர்கள். இந்த பயணத்தை அருகே இருந்து பார்த்தது எனக்குக் கிடைத்த பெருமை.
நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாகத்தான் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவீர்கள் என்று நான் எப்போதும் கற்பனை செய்தேன். ஆனால் நீங்கள் எப்போதும் உங்கள் இதயத்தை பின்பற்றினீர்கள். அதனால் நான் என் அன்பைச் சொல்ல விரும்புகிறேன். இந்த விடைபெறுதலின் ஒவ்வொரு துளி மதிப்பையும் நீங்கள் சம்பாதித்துவிட்டீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.