இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எவ்வித பங்கும் வகிக்கவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கை, அமெரிக்காவின் தலையீட்டால் நிறுத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், மக்களவையில் ஜெய்சங்கர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து மக்கள்வையில் அவர் பேசியதாவது, “ஏப்ரல் 22 முதல் ஜூன் 17 வரை பிரதமர் நரேந்திர மோடிக்கும் அதிபர் டிரம்ப்புக்கும் இடையே எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. ஏப்ரல் 22 பெகல்காம் தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்துப் பேசியிருந்தார். பிறகு, ஜூன் 17ஆம் தேதி, கனடாவில் சந்திக்காதது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளிக்கப் பேசியிருந்தார்.
பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு தயாராக உள்ளதாக மற்ற நாடுகளில் இருந்து மே 10ஆம் தேதி அழைப்பு வந்தது. ராணுவ நடவடிக்கைகளின் தலைமை தளபதி மூலம் இதனைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டோம். எந்தவொரு நிலையிலும் அமெரிக்காவுடன் ஆபரேஷன் சிந்தூர் குறித்துப் பேசவில்லை. வணிக ரீதியான எந்தவொரு பேச்சும் நடக்கவில்லை.
ஆபரேஷன் சிந்தூர் உடன் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை நின்றுவிடாது. நாட்டு குடிமக்களைக் காக்க, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும். இந்த நடவடிக்கைகள் பயங்கரவாதத்தை கையாளும் நமது பரந்துபட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.
ராஜதந்திர பார்வையில், வெளியுறவுக் கொள்கை கண்ணோட்டத்தில், பெகல்காம் தாக்குதல் குறித்து உலக நாடுகளைப் புரிந்துகொள்ளச் செய்வதே நமது இலக்காக இருந்தது. பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச அரங்குகளைக் கவனிக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியையே மேற்கொண்டோம்” எனக் குறிப்பிட்டார்.