ஆ.ராசாவுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கண்டனம்
சனாதனம் குறித்து முன்னாள் மைய அமைச்சர்ஆ.இராசா பேசிவரும் கருத்துகளுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கண்டனம் தெரிவித்துள்ளார். உதயநிதியின் சனாதனப் பேச்சை ஆதரித்து திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.இராசா தொடர்ந்து பேசிவருகிறார்.
சனாதனம் குறித்து டெல்லியில் விவாதம் நடத்தலாமா என பிரதமர் மோடிக்கும் மைய அமைச்சர் அமித்ஷாவுக்கும் ராசா பகிரங்க சவால் விடுத்தார். இந்நிலையில், ராசாவின் பேச்சுக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மைய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தன் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட கருத்தில், “ சனாதன தர்மம் பற்றி ஆ.ராசா மூர்க்கத்தனமாகக் கருத்து தெரிவித்துள்ளார். இது இந்தியா கூட்டணியின் மனநிலை வறட்சியையும், அந்தக் கூட்டணியின் ஆழமாக வேரூன்றியிருக்கும் இந்துமத வெறுப்பையும் காட்டுகிறது. பாரதத்தின் ஆன்மா, உணர்வு, வேர்களை காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் திட்டமிட்டு களங்கப்படுத்துகிறார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.