ராஜஸ்தான்
ராஜஸ்தான்

இராஜஸ்தான் முதல்வர் மகனுக்கு சம்மன் - கெலாட் பக்கம் சச்சின்!

சட்டப்பேரவைத்தேர்தல் நடைபெறும் இராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் பிரமுகர்களின் இடங்களில் அமலாக்கத் துறை நேற்று தேடுதல்சோதனை நடத்தியது. மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் டொடஸ்ராவின் இடங்களில், போட்டித்தேர்வு தேர்வுத்தாள் வெளியானதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக தேடுதல் நடத்தப்பட்டது. இதேசமயம், முதலமைச்சர் அசோக்கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டுக்கு அந்நியச் செலாவணி மோசடி தொடர்பாக விசாரணைக்கு வரும்படி அழைப்பாணை அனுப்பப்பட்டது. 

அடுத்த மாதம் 25ஆம்தேதி மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி மத்திய அரசின் துறைகளை வைத்து அரசியல் செய்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. 

ஆனால், கோவிந்த் சிங்குக்கு எதிராக பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ள மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், காங்கிரஸ் தேவையில்லாமல் இதை அரசியலாக்குகிறது என்று கூறியுள்ளார். அசோக் கெலாட்டின் அரசாங்கம் ஊழலில் மூழ்கிவிட்டதால் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாமல் அவர் விரக்தியில் இருப்பதாகவும் கஜேந்திரசிங் கூறியுள்ளார். 

இதனிடையே, அசோக் கெலாட்டின் முன்னாள் துணைமுதலமைச்சர் சச்சின் பைலட் டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைமையகத்தில் ஊடகத்தினரைச் சந்தித்து, இது பா.ஜ.க.வுக்கு வரும் தேர்தலில் பெரும் தோல்வி ஏற்படும் என்பதையே காட்டுகிறது என்றவர், 12ஆண்டு பழைய பெமா வழக்கில் வைபவுக்கு அமலாக்கத் துறை இப்போது அழைப்பாணை அனுப்பவேண்டியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். அசோக் கெலாட்டுக்கு எதிராக இதே சச்சின் பைலட் பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்து பேசியதைச் சுட்டிக்காட்டிக் கேட்டதற்கு, ”நாங்கள் அனைவரும் இப்போது ஒன்றாக வேலை செய்துகொண்டிருக்கிறோம்; கடந்த காலம் எங்களுக்கு படிப்பினையாக இருக்கும்.” என்று பழைய மோதல் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com