குல்விந்தர் கௌர், நடிகை கங்கனாவைத் தாக்கிய போலீஸ்
குல்விந்தர் கௌர், நடிகை கங்கனாவைத் தாக்கிய போலீஸ்

கங்கனா முகத்தில் குத்துவிட்ட பெண் போலீஸ்- சண்டிகரில் நடந்தது என்ன?

நடிகையும் இமாச்சலப்பிரதேசத்தில் மக்களவை பா.ஜ.க. உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருமான கங்கனா ரணாவத் இன்று பயணமாக சண்டிகர் விமானநிலையத்துக்குச் சென்றார். அங்கு பாதுகாப்புப் பணியில் மைய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தவர்கள் சோதனை செய்தனர். அப்போது பாதுகாப்புப் படை சீருடை அணிந்த பெண் ஒருவர், திடீரென கங்கனாவின் முகத்தில் குத்தினார். 

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், தாக்குதலில் ஈடுபட்ட அந்தப் பெண்ணோ, ”விவசாயிகள் போராட்டத்தை இழிவுபடுத்தி நூறும் இருநூறும் வாங்கிக்கொண்டு மூதாட்டி ஒருவர் சாகேன் பாக் போராட்டத்திலும் விவசாயிகள் போராட்டத்திலும் கலந்துகொண்டதாக கங்கனா தன் ட்விட்டரில் எழுதினார்; அவர் அங்கு நேரில் போய்ப் பார்த்தாரா? என்னுடைய தாயார் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றார்.” என சொல்லிக்கொண்டே எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் செல்லும் காட்சி காணொலியாக சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவிவருகிறது.  

சம்பவத்தை அடுத்து, கங்கனா வெளியிட்ட தகவலில், ”பலரும் என்னைத் தொடர்புகொண்டு வருகின்றனர்; நான் பத்திரமாக இருக்கிறேன். ஆனால் பஞ்சாப்பில் பயங்கரவாதமும் தீவிரவாதமும் அதிகரித்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே, தாக்குதலில் ஈடுபட்டவர் தொழிலகப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த குல்விந்தர் கவுர் என்றும் அவர் பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டம் சுல்தான்பூர் லோகியைச் சேர்ந்தவர் என்றும் விவசாயி சங்கத் தலைவர் செர்சிங் மால்கிவாலின் தங்கை என்றும் தெரியவந்தது. 

பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அவர் மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com