உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு காஷ்மீர் 370ஆவது சட்டப்பிரிவு நீக்கத்தை செல்லும் என தீர்ப்பு வழங்கியது.
உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு காஷ்மீர் 370ஆவது சட்டப்பிரிவு நீக்கத்தை செல்லும் என தீர்ப்பு வழங்கியது.

காஷ்மீர் 370ஆவது பிரிவு ரத்து - மூன்று தீர்ப்புகள் விவரம்!

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370ஆவது பிரிவை ரத்துசெய்தது செல்லும் என உச்சநீதிமன்ற அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. 

அதில், தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் ஒருசேர வழங்கிய தீர்ப்பு ஒன்றாகவும், நீதிபதி எஸ்.கே.கௌல் வேறாகவும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா இரு தீர்ப்புகளையும் ஏற்பதாகக் குறிப்பிடப்பட்டும் உள்ளன.

மூவரின் தீர்ப்பில்,” அரசியல்சாசனப் பிரிவு 370 தற்காலிகமானதே. போர்ச் சூழலுக்காக அது அமைக்கப்பட்டது எனும் அரசின் வாதம் ஏற்புக்குரியது. இந்தப் பிரிவை ரத்துசெய்ய குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் உண்டு. மாநில அரசின் ஒப்புதலைப் பெறவேண்டிய அவசியம் இல்லை. அவர் வெளியிட்ட அறிவிக்கை செல்லும். குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும்போது அந்த மாநிலத்தில் மைய அரசு எடுக்கும் எல்லா முடிவுகளையும் கேள்விக்கு உட்படுத்த முடியாது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட பிறகு அதற்கென இறையாண்மை எதுவும் இல்லை.” என்று முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நீதிபதி கவுல் அளித்த தீர்ப்பில், “ ஜம்மு காஷ்மீரில் 1980முதல் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க பக்கச்சார்பற்ற ஆணையம் ஒன்றை அமைக்கவேண்டும்; இது நல்லிணக்க ஆணையமாகவும் இருக்கவேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார். 

தலைமை நீதிபதியின் தீர்ப்பில் அரசமைப்புச் சட்டப்பிரிவு 3(ஏ)-ன்படி, எந்தவொரு மாநிலத்திலிருந்தும் ஒரு பகுதியைத் தனியாகப் பிரித்து ஒன்றியப் பகுதியாக ஆக்கமுடியும்; அதன்படி லடாக் பகுதியை ஒன்றியப்பகுதியாகப் பிரித்தது செல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதேநேரம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மாநில விரைவில் அளிக்கப்பட வேண்டும் என்றும் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அங்கு சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் தலைமை நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com