பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யா, சி.பி.ஐ.எம். எம்.பி.
பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யா, சி.பி.ஐ.எம். எம்.பி.

சர்ச்சைக்கு உள்ளான சி.பி.எம். எம்.பி.யின் கருத்து- இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு!

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சி.பி.எம். எம்.பி. பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யா கடவுள் சிவனைப் பற்றி கூறிய கருத்துக்கு இந்துத்துவ அமைப்புகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

நேற்றுமுன்தினம் 11ஆம் தேதியிட்ட தன்னுடைய முகநூல் பதிவில், "மகாதேவ்(சிவன்) மது, கஞ்சா நுகர்வுக்கு குரு என்றும் குடிநோயாளிகளின் குடும்பத்தினரை அவர் பார்த்துக்கொள்வார் என்றும் நம்பிக்கை கொண்டதால், சீரழிந்த குடும்பங்களின் எண்ணிக்கை யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டு குறிப்பு ஒன்றை எழுதியிருந்தார்.

மேலும், தான் சிறுவனாக இருந்தபோது தங்கள் பகுதியில் வசித்த தபால்காரர் குடிநோயாளியாக இருந்தார் என்றும் ஒரு நாள் அங்கிருந்த சிறிய சிவன் கோயிலுக்குள் கடவுள் சிலைக்கு முன்பாக உட்கார்ந்து, ‘நீதானே மது, கஞ்சாவுக்கு கடவுள்; குடிகாரர்களின் குடும்பங்களை நீதான் காப்பாற்ற வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டார் என்றும் அதைப் பார்த்து தான் களிப்படைந்ததாகவும் அந்த தபால்காரர் கூறியபடி குடிகாரர்களின் குடும்பங்களை மகாதேவ் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்கவேண்டும் என்றும் பிகாஸ் ரஞ்சன் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் இந்தக் குறிப்பு அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊடக விவாதங்களுக்கும் வித்திட்டுள்ளது. அகில இந்திய இந்து மகாசபா தலைவர் சுவாமி சக்ரபாணி மகாராஜ், கம்யூனிஸ்ட் கட்சி இந்து மதத்துக்கு எதிரானது என்றும் எப்போதுமே சனாதன தர்மத்துக்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த மாதம் பீகாரில் ஆர்.ஜே.டி. சட்டப்பேரவை உறுப்பினர் பத்தே பகதூர் சிங் துர்கை அம்மனைப் பற்றிய கூறிய கருத்துக்கு, பா.ஜ.க.- இந்துத்துவ அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அதைத் தொடர்ந்து வட இந்தியாவில் சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com