சித்தராமையா பதவியேற்பு விழா: பெங்களூரு செல்லும் மு.க.ஸ்டாலின்

சித்தராமையா பதவியேற்பு விழா: பெங்களூரு செல்லும் மு.க.ஸ்டாலின்

நாளை (20ம் தேதி) சித்தராமையா முதலமைச்சராக பதவியேற்கும் விழாவில் தமிழ்நாடு முதலைமச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து, கர்நாடகாவில் அடுத்த புதிய முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி நீடித்தது. முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவரைதேர்வு செய்வதற்கான கூட்டம் பெங்களூருவில் கடந்த 14ம் தேதி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மாநிலத்தின் அடுத்த முதல்வரை தீர்மானிக்கும் அதிகாரம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு வழங்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருந்த போதும், புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் காலதாமதம் ஆனது.

சித்திராமையாவும், டி.கே சிவகுமாரும் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டனர். இருவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரை தனித் தனியா சந்தித்து பேசினார்.

இந்நிலையில், கர்நாடக மாநில புதிய முதலமைச்சராக சித்தராமையா இன்று அறிவிக்கப்பட்டார். அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி.கே சிவக்குமார் துணை முதலமைச்சராக செயல்படுவார் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் தெரிவித்தார்.

நாளை பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இந்த விழாவில் கலந்து கொள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கும் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com