சிபிஐ அமைப்பின் புதிய இயக்குனராக கர்நாடக டிஜிபி நியமனம்
சிபிஐ அமைப்பின் புதிய இயக்குனராக கர்நாடகா டிஜிபி பிரவீன் சூட் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இயக்குனராக இருக்கும் சுபோத் குமார் ஜெய்ஸ்வாலின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய சிபிஐ இயக்குனரை தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மக்களவை எதிர்கட்சி தலைவர் திர் ரஞ்சன் சவுத்திரி ஆகியோரின் குழு ஆலோசனை நடத்தியது.
இந்த குழு பிரவீந் சூட்டை பரிந்துரை செய்துள்ளது. அதன்பேரில் அமைச்சரவையின் நியமன குழு புதிய இயக்குனராக பிரவீன் சூட்டை நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது. புதிய இயக்குனரின் பதிவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். பிரவீன் சூட் கர்நாடக மாநில டிஜிபியாக கடந்த மூன்றாண்டுகள் பதவி வகித்து வருகிறார்.
இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இவர் டெல்லி ஐஐடியில் பட்டம் பெற்றவர். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று 1986 கர்நாடகா கேடரில் ஐபிஎஸ் ஆக காவல் பதவியில் சேர்ந்தார். இவரின் மே 2024இல் ஓய்வு பெறுவதாக இருந்த நிலையில், புதிய பொறுப்பு காரணமாக இவர் குறைந்தது இரண்டாண்டுகள் பணியில் இருப்பார்.
முன்னதாக புதிய இயக்குனர் தேர்வு பட்டியலில் மத்தியப் பிரதேச டிஜிபி சுதிர் சக்சேனா மற்றும் தாஜ் ஹாசன் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருந்தன. ஆலோசனைக் கூட்டத்தின் போது பிரவீன் சூட்டை நியமிக்க காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்தரி எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.