ஜார்க்கண்ட்டில் சம்பாய் சோரன் தலைமையிலான புதிய அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது.
நிலமோசடி மூலம் கோடிக்கணக்கில் சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிந்து, கடந்த 31ஆம் தேதி அவரைக் கைதும்செய்தது. அதையடுத்து, அமைச்சர் சம்பாய் சோரன் புதிய முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார். சிறிதுதாமதத்துக்குப் பின்னர் அவருக்கு பதவிப்பிரமாணமும் செய்துவைக்கப்பட்டது.
ஆளுநரின் உத்தரவுப்படி, அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக இன்று சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது. ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உரையுடன் அவை தொடங்கியது.
பதவிவிலகிய முதலமைச்சர் ஹேமந்த் சோரனும் இதில் கலந்துகொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பேசிய அவர், ” 8.5 ஏக்கர் நில மோசடிக் குற்றச்சாட்டில் கைதுசெய்துள்ளனர். துணிவு இருந்தால் என் பெயரில் ஆவணம் எதையாவது காட்டுங்கள். என் மீதான குற்றத்தை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகிவிடுவேன். என் கைதுக்குப் பின்னால் ஆளுநர் மாளிகைக்கும் தொடர்பு உள்ளது. நான் கைது செய்யப்பட்ட ஜனவரி 31ம் தேதி இந்தியாவுக்கு கருப்பு நாள்.” என்று குறிப்பிட்டார்.
மொத்தமுள்ள 81 உறுப்பினர்களில் அரசுக்கு ஆதரவாக 47 பேர் வாக்களித்தனர்.