டெல்லி தலைமை மீது நம்பிக்கை இருக்கு: டி.கே.சிவக்குமார்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியும் முதலமைச்சர் நாற்காலியில் யாரை அமர வைப்பது என்ற குழப்பம் நீடித்து வருகிறது. பிரிக்க முடியாதது காங்கிரஸும் கோஷ்டி பூசலும் என்பது போல் முதலமைச்சர் நாற்காலிக்கான போட்டி நடந்து வருகிறது. “சீனியர் சித்தராமைய்யாவா.. தேர்தல் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த டி.கே.சிவக்குமாரா? யார் முதலமைச்சர் நாற்காலியில் அமரப்போகிறார்கள் எனத் தெரியவில்லை. எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துக்குவான்” என டெல்லியை ‘கை’ காட்டுகிறார்கள் உள்ளூர் காங்கிரஸ்காரர்கள்.

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டெல்லி முடிவுக்கு கட்டுப்படுவோம் எனக் கூறியுள்ளனர். தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது சித்தராமையா லீடிங்கில் வந்தபோதே அவரது மகன் எனது அப்பா முதல்வராக வந்தால் நன்றாக இருக்கும் என பற்ற வைத்தார். டெல்லி உயர்மட்ட குழு கூட்டத்துக்கும் சித்தராமையாவுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு அவர் டெல்லி சென்றுள்ளார். டி.கே.சிவக்குமாருக்கு அழைப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார். “ சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். என் தலைமையில் 135 இடங்களை வென்றிருக்கிறோம். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்து டெல்லி புறப்படுகிறேன். டெல்லி தலைமை மீது நம்பிக்கை உள்ளது. இன்னும் கூடுதல் நேரம் இருந்திருந்தால் இன்னும் அதிக இடங்களை வென்றிருப்போம்” எனக் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com