நிலக்கரி சுரங்க ஏலப் பட்டியலில் இருந்து டெல்டா பகுதிகள் நீக்கம்!

நிலக்கரி சுரங்க ஏலப்பட்டியலில் இருந்து தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளை நீக்கி மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி வெட்டி எடுக்க ஏலம் விடுவதற்கான டெண்டர் அறிவிப்பை மார்ச் 29ஆம் தேதி மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகம் வெளியிட்டது. சுரங்க ஏலம் அறிவிக்கப்பட்ட சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி மற்றும் வடசேரி ஆகிய 3 இடங்களும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் வருவதால், அதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், “3 இடங்களை ஏலம் விடுவதாக அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெறப்படவில்லை, மாநில அரசுடன் கலந்தாலோசனையும் செய்யப்படவில்லை. இத்தகைய முக்கியமான விஷயத்தில் மாநிலங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு நிலக்கரி அமைச்சகத்தின் அறிவிப்பால் ஏற்பட்டுள்ள நிலைமையை சரி செய்து தேவையற்ற போராட்டங்களையும், குழப்பங்களையும் தவிர்க்க நடவடிக்கை வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

அதைத்தொடர்ந்து நிலக்கரி சுரங்க ஏலப்பட்டியலில் இருந்து தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், நிலக்கரி சுரங்கம் அமையவுள்ள இடங்களின் திருத்தப்பட்ட புதிய பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டது. அதில், தமிழ்நட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ள மூன்று பகுதிகளையும் அதிகாரப்பூர்வமாக நீக்கி மத்திய அரசு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com