அக்னி வீரர் குறுகிய கால இராணுவ வீரர் திட்டம்
அக்னி வீரர் குறுகிய கால இராணுவ வீரர் திட்டம்

பீகாருக்கும் சிறப்பு அந்தஸ்து, அக்னி வீர், சாதிவாரிக் கணக்கெடுப்பு- பா.ஜ.க.வுக்கு நிதிஷ் கட்சி அழுத்தம்!

மக்களவைத் தேர்தல் முடிவில் பா.ஜ.க.வுக்கு அறுதிப் பெரும்பான்மை வெற்றி கிடைக்காத நிலையில், கூட்டணிக் கட்சிகளின் தயவில்தான் ஆட்சியமைக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இதை வைத்து, ஆந்திராவின் தெலுங்குதேசம் கட்சி, பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை தங்களின் கோரிக்கைகளை மறைமுகமாக நிர்பந்தம் செய்கின்றன. 

ஒன்றுபட்ட ஆந்திரப்பிரதேசத்தைப் பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டபோது, ஐதராபாத் ஆந்திரத்திடமிருந்து போனது. அதையடுத்து தலைநகராக இந்த ஊரை வைப்பது என்பதிலேயே முன்னைய ஜெகன் மோகன் அரசு முடிவுக்கு வராமல் திணறியது. 

இப்போது ஆந்திர சட்டப்பேரவைக்கும் சேர்த்து நடத்தப்பட்ட தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றிபெற்று சந்திரபாபு முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளார். ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தபோது, மக்களவைத் தலைவர் பதவியை அக்கட்சி பெற்றது. 

அதைப் போல இப்போதும் கேட்பதுடன், அமைச்சரவையில் குறிப்பிட்ட துறைகளை வலியுறுத்திக் கேட்டுவருகிறது. அத்துடன், வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுள்ளது. 

ஆந்திராவைப் போலவே, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் பீகாரைப் பிரித்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு, பீகாரின் வளர்ச்சி குறைந்துவிட்டது என அங்கு பெருங்குறை உள்ளது. எனவே, தங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என்று மூன்றாம் முறையாக மத்தியில் ஆட்சியமைக்கும் பா.ஜ.க.வை ஐ.ஜ.த. கட்சி வலியுறுத்தியுள்ளது. 

இதைப்போல, கடந்த 2022ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குறுகிய கால இராணுவ வீரர் திட்டத்துக்கும் பீகாரில் எதிர்ப்பு உள்ளதால் மைய அரசு அதைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் ஐ.ஜ.த. பேச்சாளர் கேசிதியாகி கேட்டுக்கொண்டுள்ளார். 

சாதிவாரிக் கணக்கெடுப்பைப் பொறுத்தவரை தங்கள் கட்சி அதற்கு தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

பொது சிவில் சட்டத்துக்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் ஆனால் அதைப் பற்றி அனைத்து கட்சிகள், அமைப்புகளிடம் கருத்துக்கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com