சட்டப்பேரவைத் தேர்தல்: மிசோரத்தில் 77% வாக்குப்பதிவு!

மிசோரம் தேர்தல்
மிசோரம் தேர்தல்
Published on

ஐந்து மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்ட சட்டப்பேரவைத் தேர்தலில், முதலில் நேற்று மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

மிசோரத்தில் வாக்காளர்கள் காலை 7 மணி முதலே வாக்குச்சாவடிகளுக்கு வந்து நீண்டவரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 6 மணி நிலவரப்படி, 77.61 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டது. ஆனாலும், தொலைவான, எளிதில் செல்லமுடியாத வாக்குச்சாவடி விவரங்கள் வராதநிலையில், வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் அதிகமாக இருக்கக்கூடும். இறுதியான வாக்கு விவரம் இன்று வெளியிடப்படும்.

முதலமைச்சர் சோரம்தங்கா ஐசாலில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களிக்கச் சென்றபோது, இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. பழுது சரிசெய்யப்பட்ட பிறகு காலை 9.40 மணிக்கு அவர் வாக்களித்தார்.

இந்த மாநிலத்தில் வாக்குப்பதிவில் எந்த வன்முறையும் இன்றி அமைதியாக நடந்துமுடிந்தது.

ஆளும் கட்சியான மிசோ தேசிய முன்னணி கடந்த தேர்தலில் 28 தொகுதிகளில் வென்றது. மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என முதலமைச்சர் சோரம்தங்கா நம்பிக்கை தெரிவித்தார்.

ஆறு இடங்களில் வென்ற சோரம் மக்கள் இயக்கம், ஐந்து இடங்களைப் பிடித்த காங்கிரஸ், ஒரே இடத்தைப் பிடித்த பா.ஜ.க. ஆகியவற்றுடன், ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிட்டுள்ளது.

இந்தத் தேர்தலின் வாக்குகள், மற்ற நான்கு மாநில வாக்குகளுடன் சேர்த்து, அடுத்த மாதம் 3ஆம் தேதி எண்ணப்படும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com