குடியரசுத் தலைவரை சந்தித்த  எதிர்க்கட்சிகள்
குடியரசுத் தலைவரை சந்தித்த எதிர்க்கட்சிகள்Office

மாநிலங்களவைக்கு இரண்டு மணிப்பூர் பெண்களை பரிந்துரைக்க வேண்டும் - குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை!

மாநிலங்களவைக்கு இரண்டு மணிப்பூர் பெண்களை பரிந்துரைக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் சார்பாக குடியரசுத் தலைவரைச் சந்திக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேரம் கேட்டிருந்தார். அதன்படி, ‘இந்தியா’ கூட்டணி சார்பில் 21 எம்.பி.க்கள் குழு நேற்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்தனர். அப்போது மணிப்பூர் வன்முறை குறித்து குடியரசுத் தலைவரிடம் மல்லிகார்ஜுன கார்கேவும், காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் விளக்கிக் கூறினர். தொடர்ந்து மணிப்பூர் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்தச் சந்திப்பு குறித்து காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், "எதிர்க்கட்சிகளின் சார்பில் மணிப்பூர் சென்று வந்த 21 எம்.பி.க்கள் உட்பட, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 31 எம்.பி.க்கள் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்தோம். அவரிடம் கோரிக்கை மனு ஒன்றினை அளித்தோம். அப்போது, மணிப்பூர் நிலவரம் குறித்து, குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறை, மறுவாழ்வு மற்றும் பிற நிலவரங்கள் குறித்து நாங்கள் விளக்கினோம். இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரில் சென்று மாநிலத்தில் அமைதி ஏற்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்களுடைய மிக முக்கியமான கோரிக்கை" என்று தெரிவித்தார்.

அதேபோல், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்திலிருந்து இரண்டு பெண்களை மாநிலங்களவைக்கு பரிந்துரைக்க வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகளின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com