ராகுல் காந்தி பாஸ்போர்ட்டுக்கு தடையில்லா சான்று: நீதிமன்றம் முக்கிய உத்தரவு

2019 மக்களவைத் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றிய போது பிரதமர் மோடியை விமர்சித்து பேசினார். மோடி என்ற துணை பெயர் கொண்டவர்கள் அனைவரும் திருடர்களாக இருக்கிறார்கள் என்றார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு ஒட்டுமொத்த மோடி சமூகத்தை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத் நீதிமன்றம் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்தது.

அத்துடன் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. மேல்முறையீடு செய்து ராகுல் தற்போது ஜாமீனில் உள்ளார். நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் நாடாளுமன்ற உறுப்பினருக்கான பிரத்யேக பாஸ்போர்ட்டை அவர் ஒப்படைத்தார்.

எனவே, தனக்கு சாதாரண குடிமகனின் பாஸ்போர்ட்டை விண்ணப்பிக்க தடையில்லா சான்று கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ராகுல் காந்தி முறையிட்டார். இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, ’ராகுல் காந்திக்கு புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கு அனுமதி வழங்குவது தேசிய ஹெரால்டு வழக்கு விசாரணையை பாதிக்கும் என்று கூறினார்.

சுப்ரமணிய சுவாமி தரப்புக்கு பதில் அளித்த ராகுல் தரப்பு வழக்கறிஞர், கடந்த 2015 ஆம் ஆண்டு, ஹெரால்டு வழக்கில் பிணை வழங்கப்பட்ட போதே, ராகுல் காந்தி வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படவில்லை என்று கூறினார். மேலும், 10 ஆண்டுகளுக்கு தடை இல்லா சான்று வழங்கக் கோரி ராகுல் தரப்பு கோரியது.

வாதத்தை கேட்ட நீதிமன்றம், உங்கள் விண்ணப்பத்தை ஏற்று மூன்று ஆண்டுகள் தடை இல்லா சான்று தருகிறோம். 10 ஆண்டுகள் தர முடியாது என்று கூறி உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் ஜூன் 4ஆம் தேதி அன்று ராகுல் காந்தி அமெரிக்கா செல்லவுள்ளார். அங்கு அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்களை சந்தித்து பேசும் அவர், பொதுக்கூட்டத்திலும் உரையாற்றுகிறார். இந்த பயணத்தை கருத்தில் கொண்டு தான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் ராகுல்.

logo
Andhimazhai
www.andhimazhai.com