ரூ.2,000 நோட்டுகளை மாற்ற சிவப்புக் கம்பளம் விரித்துள்ளார்கள்: ப.சிதம்பரம்

ரூ.2,000 நோட்டுகளை மாற்ற சிவப்புக் கம்பளம் விரித்துள்ளார்கள்: ப.சிதம்பரம்

சாமானிய மக்களிடம் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இல்லவே இல்லை. அறிமுகப்படுத்தப்பட்ட சில காலத்திலேயே சாமானிய மக்கள் அதனை புறக்கணித்துவிட்டனர்.

ரூ.2,000 நோட்டுகளை மாற்ற ஆவணங்களோ, அடையாள அட்டையோ தேவையில்லை என்று எஸ்பிஐ அறிவித்துள்ள நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்த அறிவிப்பை முன்வைத்து பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு, அந்த நடவடிக்கையை கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சாமானிய மக்களிடம் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இல்லவே இல்லை. 2016-ல் அவை அறிமுகப்படுத்தப்பட்ட சில காலத்திலேயே சாமானிய மக்கள் அதனை புறக்கணித்துவிட்டனர். ஏனென்றால் அன்றாட சில்லறை புழக்கத்துக்கு ரூ.2000 நோட்டுகள் பயனற்றதாகவே இருந்தது. அப்படியென்றால் ரூ.2000 நோட்டுகளை யார் தான் வைத்திருந்தனர்? அதற்கான விடை உங்களுக்குத் தெரியும்.

ரூ.2000 நோட்டுகளை கருப்புப் பணத்தை ஒழிக்கவே கொண்டு வருகிறோம் என்ற பாஜகவின் அறிவிப்பு இங்கே தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது. உண்மையில், ரூ.2000 நோட்டுகள் கருப்புப் பண பதுக்கல்காரர்கள் அவற்றை எளிதில் பதுக்கிவைத்துக் கொள்ள மட்டுமே உதவியது.

இப்போது ரூ.2000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அவற்றை மாற்றிக் கொள்ள சிவப்புக் கம்பளம் விரித்துள்ளனர். பாஜகவின் கருப்புப் பண ஒழிப்பு கொள்கை எங்கே போனது? 2016-ல் ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டதே முட்டாள்தனமான முடிவு. 7 ஆண்டுகளுக்குப் பின்னராவது அந்த முட்டாள்தனமான முடிவை திரும்ப்பப் பெற்றுள்ளதில் எனக்கு மகிழ்ச்சியே. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com