உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

வாக்கு எண்ணிக்கை : ஜனாதிபதி தலையிட முன்னாள் நீதிபதிகள் கடிதம்!

நாளை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என முன்னாள் நீதிபதிகள் அவருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர். 

உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் அக்பர் அலி, அருணா ஜெகதீசன், அரிபரந்தாமன், அஞ்சனா பிரகாஷ்(பாட்னா உயர்நீதிமன்றம்), பி.ஆர்.சிவக்குமார், சி.டி.செல்வம், எஸ். விமலா ஆகியோர் அந்தக் கடிதத்தை எழுதியுள்ளனர். 

அதில், “ஆளும் பா.ஜ.க. ஆட்சி இந்தத் தேர்தலில் தோற்றுவிட்டால் ஆட்சி மாற்றம் சுமுகமாக நிகழாது. அரசமைப்புச் சட்ட நெருக்கடியை அது உருவாக்கக்கூடும். 

தேர்தலை நியாயமான முறையில் நடத்துமாறு பல முறை தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியும் அது தன் கடமையைச் செய்யவில்லை.

தொங்கு நாடாளுமன்றம் அமையுமானால் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியையே ஆட்சியமைக்க குடியரசுத்தலைவர் அழைப்பு விடுக்கவேண்டும். புதிய ஆட்சி அமையும்வரை எந்தச் சிக்கலும் நிகழாமல் தடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.” என்று நீதிபதிகள் குடியரசுத் தலைவரை வலியுறுத்தியுள்ளனர். 

மேலும், வாக்கு எண்ணும்போது விபரீதமாக ஏதும் ஏற்பட்டால் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் தலைமை நீதிபதிக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com