நீட்... கோட்டாவில் 8 மாதங்களில் 15ஆவது மாணவர் தற்கொலை!
தமிழகம் முழுவதும் நீட்தேர்வு வேண்டாம் என பரவலாக தொடர் போராட்டங்கள் ஒரு பக்கம் நடந்தாலும், நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிக்கும் மையமாக ராஜஸ்தான் மாநிலம் கோட்டா இருந்துவருகிறது. இங்கு இது ஒரு பெரும் தொழில் போல நகரம் முழுக்க பயிற்சி மையங்களும் தங்கும் விடுதிகளுமாக நிறைந்துள்ளன.
பெற்றோரின் வற்புறுத்தலால் இங்கு படிக்கவரும் மாணவர்களில் பலர் தங்களை மாய்த்துக்கொள்ளும் துயரமும் அவ்வப்போது நிகழ்கிறது. இந்த ஆண்டில் மட்டும் நேற்றுமுன்தினம்வரை 14 நீட் பயிற்சி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
நேற்று உத்தரப்பிரதேச மாநிலம் பர்சானாவைச் சேர்ந்த 21 வயது மாணவன் தன்னை மாய்த்துக்கொண்டார்.
அவர் ஏழு நாள்களுக்கு முன்னர்தான் நீட் பயிற்சிக்காக கோட்டாவுக்குச் சென்றுள்ளார். நேற்று மாலையில் தன் உடையைக் காயப் போட்டுக்கொண்டிருந்தவரை வீட்டு உரிமையாளர் அனூப்குமார் பார்த்துள்ளார். அதன்பிறகு அவர் நீண்ட நேரம் காணாமல்போகவே சந்தேகத்தில் அனூப் இரவு அவருடைய அறைக்குச் சென்று பாத்துள்ளார்.
அறை பூட்டப்பட்டு தட்டியும் கதவைத் திறக்காததால் அனூப் காவல்துறைக்குத் தெரிவித்தார். அவர்கள் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது மின்விசிறியில் தூக்கிட்டு மாணவர் மாய்த்துக்கொண்டது உறுதியானது.
கடந்த ஆண்டில் நீட் பயிற்சி மாணவர்கள் 29 பேர் இப்படி மாய்த்துக்கொண்டனர். இந்த ஆண்டில் ஜனவரி 24, 29, பிப்ரவரி 2, 13, 20, மார்ச் 8, 26, 28, ஏப்ரல் 29, 30, ஜூன் 6, 16, 27, ஜூலை 4 என மாணவர்கள் 14 பேர் தாங்களே மாய்த்துக்கொண்டனர்.
ஆண்டுதோறும் தொடரும் இந்தத் துயரத்துக்கு எப்போதுதான் தீர்வு வருமோ?