குஜராத் விளையாட்டு மையத்தில் தீ விபத்து
குஜராத் விளையாட்டு மையத்தில் தீ விபத்து

குஜராத் துயர்... 24 பேர் பலி! - விளையாட்டு மையத் தீ விபத்தில் 9 சிறுவர்களும் உயிரிழப்பு!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் விளையாட்டு மையம் ஒன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 9 பேர் சிறுவர்கள். 

ராஜ்கோட்டில் உள்ள அந்த விளையாட்டு மையத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக அமைப்பு ஒன்றில் முதலில் தீ பற்றியுள்ளது. காற்றின் வேகத்தால் தீ மளமளவெனப் பரவி சிறிது நேரத்திற்குள் இருபதுக்கும் மேற்பட்டோரைப் பலிகொண்டது. 

அதிகமானவர்கள் தீயின் நடுவே சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர். ஆனால் காற்றின் வேகம் காரணமாக அவர்களால் விரைந்து செயல்பட முடியவில்லை. 

இருபது பேரின் சடலங்களை மீட்டுள்ளதாக ராஜ்கோட் நகர காவல்துறை ஆணையர் ராஜு பர்கவா ஊடகத்தினரிடம் தெரிவித்தார்.

யுவ்ராஜ்சிங் சோலங்கி என்பவரே இந்த மையத்தை நடத்திவருவதாகவும் உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருந்ததற்காக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் பர்கவா கூறினார்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு முதலமைச்சர் பூபேந்தர் பட்டேல் கூறினார். 

சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ உள்ளூர் நிர்வாகம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com