கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தையை அடுத்த 30 மணி நேரத்தில் மீட்ட காவல் துறையினர், குற்றவாளிகள் 3 பேரைக் கைது செய்துள்ளனர்.
இது குறித்து கலபுரகி மாவட்ட காவல் ஆணையர் சரணப்பா கூறியதாவது:
“கலபுரகியில் உள்ள ஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆண் குழந்தை கடத்தப்பட்டது. இது தொடர்பான புகார் பிரம்ஹாபூர் காவல் நிலையத்தில் மாலை 5:30 மணிக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் மருத்துவமனையிலிருந்த சிசிடிவி வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், செவிலியர் உடையில் உள்ள 3 பெண்கள் குழந்தையை தூக்கிக் கொண்டு ஆட்டோவில் ஏறுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நகரில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களிடமும் விசாரித்து, அவர்களின் உதவியோடு, செவ்வாய் கிழமை (நவம்பர் 26) மாலை குழந்தையை போலீசார் மீட்டனர்.
குழந்தை கடத்தலில் ஈடுபட்ட மூன்று பெண்களையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஐம்பதாயிரம் பணத்துக்காக அவர்கள் இந்த கடத்தலில் ஈடுபட்டதை அவர்களே ஒத்துகொண்டனர்” என்றார்.