சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் வேட்டை
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் வேட்டை

தேர்தல் நேரத் தாக்குதல்... சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் கொலை- அமித் ஷா பாராட்டு!

சத்தீஸ்கர் மாநிலம் வடக்கு பஸ்தார் காட்டுப் பகுதியில் 30 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் மக்களவைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வரும் 19ஆம்தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து சத்தீஸ்கர் உட்பட்ட பல மாநிலங்களில் 19, 26 என பல கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

பொதுவாக,தேர்தலைப் புறக்கணிக்குமாறு மாவோயிஸ்ட்டுகள் தங்கள் பகுதிகளில் அதற்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம். 

இந்த நிலையில், சத்தீஸ்கரின் வடக்கு பஸ்தார் காட்டுப் பகுதியில் நேற்று மாநில காவல்துறை, எல்லைப் பாதுகாப்புப் படையினர் இணைந்த கூட்டுத்தாக்குதலில் 30 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களில் 29 பேரின் சடலங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாவோயிஸ்ட்டுகளின் செல்வாக்குப் பகுதியான பஸ்தார் காட்டுப் பகுதியில் மக்களவைத்தேர்தல் வரும் 19ஆம்தேதி நடைபெறுகிறது. நேற்றைய மோதல் கொலை நடைபெற்ற காங்கர் பகுதியில் வரும் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

இந்தப் பின்னணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட படையினருக்கும் காவல்துறையினருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார். காயம்பட்ட காவல்துறையினர் விரைவில் நலம்பெற விழைவதாகவும் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

காங்கர் உட்பட்டஏழு மாவட்டங்களைக் கொண்ட பஸ்தார் காட்டுப்பகுதியில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை பல்வேறு தாக்குதல்களில் 76 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அம்மாநில காவல்துறை தெரிவிக்கிறது. 

கடந்த பத்தாண்டுகளில் இது மிகப்பெரிய தாக்குதல் என்று பஸ்தார் காவல்துறை ஐஜி சுந்தராஜ்தெரிவித்துள்ளார். 

கடந்த 2016இல் வேட்டைநாய்ப் படையினர் நடத்தியதாக்குதலில் 30 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். அதற்கடுத்து 2021இல் தலைக்கு விலை வைக்கப்பட்ட மிலிந்த் தெல்தும்டே உட்பட 25 பேர் அரச ஆயுதப் படையினரால் சாகடிக்கப்பட்டுள்ளனர். 

நேற்றைய தாக்குதலில் அரசுத் தரப்பில் எந்த உயிரிழப்பும் இல்லை என்று சத்தீஸ்கர் காவல்துறை கூறியுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com