பாதசாரி உயிரிழப்புகளில், 1.8 லட்சம் அதாவது 30% உயிரிழப்புகள் பரபரப்பான நகரங்களைக் காட்டிலும் தேசிய நெடுஞ்சாலைகளில்தான் அதிகமாக நடக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
சாலைப் போக்குவரத்து அமைச்சகத் தரவுகளை ஆய்வு செய்து 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' வெளியிட்டுள்ளது.
இந்த உயிரிழப்பிற்கான முக்கிய காரணம் பாதுகாப்பான நடைபாதைகள், சாலையைக் கடப்பதற்கான சரியான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததுதான் என்று கூறப்படுகிறது.
இந்தப் பிரச்னைக்கான தீர்வை விரைவில் காண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
2019 - 2024-க்கு இடைப்பட்ட காலத்தில் பதிவான 1.8 லட்சத்திற்கும் மேற்பட்ட பாதசாரி உயிரிழப்புகளில் ஏறக்குறைய 30% தேசிய நெடுஞ்சாலைகளிலேயே நிகழ்ந்துள்ளன.
2019 முதல் 2024 வரை ஆண்டுதோறும் 30,500-க்கும் மேற்பட்ட பாதசாரிகள் உயிரிழந்துளளளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் 12-13% உயிரிழப்புகள் மட்டுமே பரபரப்பான நகரங்களில் நிகழ்ந்துள்ளன.
பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு, அரசியலமைப்பின் 21ஆவது பிரிவின் கீழ் பாதசாரிகள் நடைபாதை பயன்படுத்துவதை அடிப்படை உரிமையாக்கியது.
2024-ஆம் ஆண்டிற்கான மாநில வாரியான தரவுகளின்படி, அதிகபட்சமாகத் தமிழகத்தில் 4,712 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் முன்னாள் இணைச் செயலாளர் அபய் டாம்லே கூறுகையில்,
" நகரத்தில் உள்ள சாலைகள் பெரும்பாலும் வாகனங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட்ட பாதசாரிகள், வாகனங்கள் செல்லும் பாதையிலேயே நடக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால் விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன. எனவே, பாதசாரிகளின் பாதுகாப்பிற்கான விதிமுறைகளை தேசிய நெடுஞ்சாலைகளுக்கும், பிற சாலைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்." என்று குறிப்பிட்டார்.