நாடாளுமன்ற மக்களவை
நாடாளுமன்ற மக்களவை

மக்களவையிலிருந்து மேலும் 33 எம்.பி.கள் இடைநீக்கம்!

நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தி.மு.க. உட்பட 33 எதிர்க்கட்சி எம்.பி.கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மக்களவையில் பாதுகாப்பு விதிமீறல் சம்பவம் தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்.பி.கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், 14 எம்.பி.களின் இடைநீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.கள் முழக்கம் எழுப்பியபடி இருந்தனர்.

இதையடுத்து, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தி.மு.க. உட்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 33 எம்.பி.களை நடப்புக் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வதாக அவைத் தலைவர் ஓம்பிர்லா அறிவித்தார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.களின் விவரம்:

காங்கிரஸ்

ஆதிர் ரஞ்சன் செளத்ரி, ஆண்டோ ஆண்டனி, கே. முரளீதரன், திருநாவுக்கரசர், சுரேஷ் கொடிகுன்னில், அமர்சிங், விஜய் வசந்த், கௌரவ் கோகோய், ராஜ்மோகன் உன்னிதன், ஜெயகுமார், அப்துல்.

திரிணாமூல் காங்கிரஸ்

கல்யாண் பானர்ஜி, அபரூபா போடர், பிரசூன் பானர்ஜி, சௌகதா ராய், சதாப்தி ராய், பிரதிமா மோண்டல், ககோலி கோஷ் தஸ்திதார், சுனில் குமார் மொண்டல், அசித் குமார் மால்

தி.மு.க.

ஆ. ராஜா, தயாநிதி மாறன், ஜி.செல்வம், சி.என். அண்ணாதுரை, தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, பழனிமாணிக்கம், எஸ். ராமலிங்கம், டி.ஆர். பாலு.

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்

முகமது பஷீர், நவாஸ் கனி

புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி

என்.கே. பிரேமச்சந்திரன்

ஐக்கிய ஜனதாதளம்

கௌசலேந்திர குமார்.

ஏற்கெனவே மக்களவையில் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி அமளியில் ஈடுபட்ட 14 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களோடு சேர்த்தால், மக்களவையில் நடப்பு கூட்டத்தொடரில் மட்டும் 46 எம்.பி.கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையனும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் 33 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதுக்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ஊடுருவல்காரர்கள் இரண்டு பேர் மக்களவைக்குள் தாக்குதல் நடத்தினார்கள். அதற்கு நியாயம் கேட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து நாடாளுமன்றம், ஜனநாயகம் இரண்டின் மீதும் மோடி அரசாங்கம் தாக்குதல் நடத்தியுள்ளது.” என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com