இந்தியாவில் பள்ளி நடைபெறும் ஒவ்வொரு நாளும் 34 இலட்சம் குழந்தைகள் பார்வைக்குறைபாட்டுடன் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கிட்டப்பார்வை, தூரப்பார்வை, ஒருதளப் பார்வை ஆகிய பிரச்னைகளால் வகுப்பில் கரும்பலகைகளைப் பார்க்கமுடியாமலும் புத்தகங்களை வாசிக்கமுடியாமலும் இவர்கள் அவதிப்படுகின்றனர்.
பார்வையிழப்புத் தடுப்புக்கான பன்னாட்டு முகமையும்-ஐஏபிபி சேவா பவுண்டேசனும் இணைந்து செய்த ஆராய்ச்சியின் முடிவில் இது தெரியவந்துள்ளது.
இப்படி பார்வைக் குறைபாடு உள்ள குழந்தைகள் சக மற்ற குழந்தைகளைவிட கற்றுக்கொள்வதில் பாதியளவுக்குதான் ஈடுபட முடிகிறது என்றும் இந்த ஆய்வுமுடிவு தெரிவிக்கிறது.
கற்றுக்கொள்வதைத் தொடர்ந்து வேலைகளில் சேரும் இவர்களின் உற்பத்தித் திறனும் பாதிக்கப்படுவதாகவும், முன்கூட்டியே பிரச்னையைக் கண்டறிந்து கண்ணாடி அணிந்துவிட்டால் அதன் பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும் என்றும் வருமானப்படி பார்த்தால் தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பிலேயே ஒரு குழந்தைக்கு கண்ணாடி அணிவித்துவிட்டால் 18 வயதுவரை அக்குழந்தை அதைத் தொடரும்போது, வேலையில் சேரும்போது பாதிப்படைந்தவரைவிட 55.6 சதவீதம் கூடுதல் வருமானம் பெறமுடியும் என்றும் ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.
இது ஒவ்வொரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் தாக்கத்தை உண்டாக்குகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.