500 சந்தேகங்கள்... 1000 மர்மங்கள்... 2000 பிழைகள்!

500 சந்தேகங்கள்... 1000 மர்மங்கள்... 2000 பிழைகள்!

"ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெற்ற நடவடிக்கை கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதனை மாற்றுவதற்கு ஏதுவாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதற்கான தேவை நிறைவடைந்த நிலையில், கடந்த 2018-19 ஆம் ஆண்டில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியன்று, சுமார் 6 லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாக ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது. ஆனால், கடந்த மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, சுமார் 3 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருப்பதாக ஆர்.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது.

மேலும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பெரும்பாலான பண பரிவர்த்தனைகளில் இடம்பெறவில்லை என்றும் ஆர்.பி.ஐ. கூறியுள்ளது. இந்நிலையில், பொதுமக்களிடம் இருக்கும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதன் படி, வரும் 23 ஆம் தேதி முதல், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள ஆர்.பி.ஐ. அறிவுறுத்தியுள்ளது. அதேநேரம்இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை குறித்து அரசியல் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

அந்த வகையில் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவில்,

500 சந்தேகங்கள்

1000 மர்மங்கள்

2000 பிழைகள்!

கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்!” என பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com