6 மாதங்கள் நீடித்த டிஜிட்டல் அரஸ்ட்… ரூ. 32 கோடியை இழந்த பெண் பொறியாளர்… நடந்தது எப்படி?

6 மாதங்கள் நீடித்த டிஜிட்டல் அரஸ்ட்… ரூ. 32 கோடியை இழந்த பெண் பொறியாளர்… நடந்தது எப்படி?
Published on

பெங்களூரை சேர்ந்த, பெண் மென்பொறியாளரை டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் மிரட்டி, ஆறு மாதங்களில், 32 கோடி ரூபாய் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூரின் இந்திரா நகரில் 57 வயதான பெண், குடும்பத்துடன் வசிக்கிறார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக பணியாற்றுகிறார். 2024 செப்டம்பர் 15ஆம் தேதி, இவருக்கு அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து போன் வந்துள்ளது.

அதில் பேசியவர், மும்பை, அந்தேரியில் உள்ள டி.ஹெச்.எல்.கூரியர் நிறுவன பிரதிநிதி என அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.

அதன்பின், 'உங்கள் பெயருக்கு மூன்று கிரெடிட் கார்டுகள், நான்கு பாஸ்போர்ட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் அடங்கிய பார்சல் வந்துள்ளது' எனக் கூறி, 'சிபிஐ அதிகாரி இங்கிருக்கிறார். அவரிடம் பேசுங்கள்' என்று சொல்லியிருக்கிறார்.

சிபிஐ அதிகாரி போன்று பேசிய வேறொரு நபர், அப்பெண்ணின் வங்கி கணக்கு, பண பரிவர்த்தனை உட்பட தனிப்பட்ட தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டுள்ளார்.

மேலும், 'உங்களின் ஆவணங்களை சைபர் குற்றவாளிகள் தவறாக பயன்படுத்துகின்றனர். உங்களை அவர்கள் கண்காணிக்கின்றனர். இதை பற்றி நீங்கள் போலீசாரிடம் புகார் அளிக்கக் கூடாது. யாரிடமும் சொல்லவும் கூடாது. சட்ட உதவிக்காக யாரையும் நாடவும் கூடாது. ஒருவேளை நீங்கள் சொன்னால், உங்கள் குடும்பத்தினரையும் வழக்கில் சிக்க வைப்போம்' என மிரட்டியுள்ளனர்.

இதனால் கலக்கமடைந்த அந்த பெண், நடந்த விஷயத்தை தன் குடும்பத்தினரிடம் கூறாமல் இருந்துள்ளார். சில நாட்களுக்கு பின், சிபிஐ அதிகாரி பிரதீப் சிங் என கூறி, அவரை தொடர்பு கொண்ட நபர், 'உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருக்கிறோம். உங்களின் சொத்துகள், பணம் குறித்து தகவலை சொல்லுங்கள்’ என கேட்டுள்ளார்.

தன்னிடம் பேசுவது, உண்மையான சிபிஐஅதிகாரி என நம்பி, அனைத்து விபரங்களையும் அந்த பெண் கூறியுள்ளார். தொடர்ந்து அவர்களின் கண்காணிப்பில் இருந்துள்ளார் அவர்.

2024 செப்டம்பர் 23இல், ரிசர்வ் வங்கி அதிகாரி போன்று அப்பெண்ணிடம் பேசிய நபர், 'உங்கள் கணக்கில் உள்ள பணத்தை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. நாங்கள் கூறும் வங்கி கணக்குக்கு, பணத்தை பரிமாற்றம் செய்யுங்கள். விசாரணை முடிந்து நீங்கள் தவறு செய்யவில்லை என்பது உறுதியானால், பணத்தை மீண்டும் உங்கள் கணக்குக்கு மாற்றுவோம்' என கூறியுள்ளார்.

இதன்படி அப்பெண்ணும் தன் சேமிப்பில் இருந்த 31.83 கோடி ரூபாயை படிப்படியாக, அந்நபர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். '2025 பிப்ரவரிக்குள் பணம் திரும்ப கிடைக்கும்' என, நம்ப வைக்கப்பட்டுள்ளார். ஆனால், பிப்ரவரி தாண்டியும் பணத்தை திருப்பித்தரவில்லை. இது குறித்து அவர் கேட்ட போதும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.

தன் மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாலும், பயம் காரணமாகவும் அப்பெண், போலீசில் புகார் அளிக்க தயங்கியுள்ளார்.

சமீபத்தில் சிபிஐ அதிகாரிகள் பெயரில் பேசிய நபர்கள், 'உங்களை டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து விடுவித்துள்ளோம்' என கூறி, போலியான கிளியரன்ஸ் சர்ட்டிபிகேட்டும் அனுப்பியுள்ளனர். ஆனால், பணம் திரும்ப வரவில்லை. அந்நபர்களும் தொடர்பை துண்டித்துக் கொண்டனர்.

இது மோசடி என்பதை புரிந்து கொண்ட அப்பெண், கடந்த நவ.14ஆம் தேதி, பெங்களூரு கிழக்கு சைபர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அந்த பெண் கடந்த ஆறு மாதங்களாக, 187 வங்கி கணக்குகளுக்கு, 31.83 கோடி ரூபாயை பரிமாற்றம் செய்துள்ளார். கர்நாடகாவில் டிஜிட்டல் அரெஸ்ட் வலையில் சிக்கி, பறிகொடுத்த மிக அதிகமான தொகை என்கிறார்கள்.

logo
Andhimazhai
www.andhimazhai.com