குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

கடும் எதிர்ப்புக்கு உள்ளான 7 மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்!

தில்லி நிா்வாக திருத்த மசோதா உள்பட 7 மசோதாகளுக்கு குடியரசுத்தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து அந்த மசோதாக்கள் சட்டங்களாக ஆகியுள்ளன.

புதுதில்லியில் அரசு அதிகாரிகள் நியமனம், பணி இடமாற்றம் செய்வதற்கு யாருக்கு அதிகாரம் என்பதில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் புதுதில்லி அரசுக்கே முழு அதிகாரம் உண்டு என தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பைச் செயல்படுத்த விரும்பாத மத்திய அரசு, கடந்த மே மாதம் ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்தது. அதன்மூலம் புதிதில்லி அரசு அதிகாரிகளின் நியமனம், பணி இடமாற்றம் குறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம், துணைநிலை ஆளுநருக்கே மீண்டும் வழங்கப்பட்டது.

இதைச் சட்டமாக்கும் நோக்கில், மத்திய அரசு கொண்டுவந்த புதுதில்லி நிா்வாக திருத்த மசோதாவுக்கு, கடந்த ஆகஸ்ட் 3-இல் மக்களவையும், ஆகஸ்ட் 7-இல் மாநிலங்களவையும் ஒப்புதல் அளித்தன. நாடாளுமன்றத்தின் ஒப்புதலைத் தொடர்ந்து, இந்த மசோதா குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், புதுதில்லி நிர்வாக மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் முா்மு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த மசோதா சட்டமாகியுள்ளது.

இதுதவிர டிஜிட்டல் தனிநபா் தரவுப் பாதுகாப்பு மசோதா, பிறப்பு - இறப்புப் பதிவு திருத்த மசோதா, இந்திய மேலாண்மை நிறுவனங்கள் சட்டத்திருத்த மசோதா, தேசிய பல்மருத்துவ ஆணைய மசோதா, கடலோரப் பகுதிகள் கனிம மேம்பாட்டு- ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா, ஜான் விஸ்வாஸ் சட்டத் திருத்த மசோதா ஆகிய 6 மசோதாகளுக்கு குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் அந்த மசோதாக்களும் சட்டங்களாக ஆகியுள்ளன.

மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பெரும்பாலும் அமளியில் ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில்தான் பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றின் எதிர்ப்பையும் மீறி இந்த ஏழு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com