75 ரூபாய் நாணயம் வெளியிடப்படும்: மத்திய அரசு

75 ரூபாய் நாணயம் வெளியிடப்படும்: மத்திய அரசு

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி, நாளை மறுதினம் திறந்து வைக்கவுள்ளார். இதனை கொண்டாடும் விதமாக 75 ரூபாய் நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி கருப்பு பணத்தை ஒழிக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி அன்று முதல் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறியிருந்தார். மக்கள் இந்த நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் புதியதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இதனை எடுப்பதற்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை புதிய 2,000 ரூபாய் நோட்டுக்கள் சரிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததைவிட இந்த நோட்டுக்களின் புழக்கம் மக்கள் மத்தியில் குறைவாகவே இருந்தது.

ஒரு கட்டத்தில் அதாவது 2018-2019ம் ஆண்டில் இந்த நோட்டுகள் அச்சடிக்கப்படுவதே முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. மே 23ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ம் தேதி வரை இந்த 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம், இந்த கால கெடுவுக்கு பின்னர் இந்த நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது 75 ரூபாய் நாணயத்தை மத்திய நிதியமைச்சகம் வெளியிட உள்ளது. மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் நிலையில், இவ்விழாவை நினைவுகூரும் வகையில், இந்நாணயம் வெளியிடப்பட இருக்கிறது. 44 மில்லி மீட்டர் வட்டம் கொண்ட இந்த நாணயம் 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் நிக்கல், 5 சதவீதம் துத்தநாகம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாணயத்தின் ஒரு புறம் அசோக சின்னத்துடன் சத்யமேவ ஜெயதே, பாரத் என்ற வார்த்தைகளும், மறுபுறம் நாடாளுமன்ற வளாகத்தின் படமும் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com