இளம் வாக்காளர்கள் (கோப்புப் படம்)
இளம் வாக்காளர்கள் (கோப்புப் படம்)

தேர்தல் திருவிழா: 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி!

18ஆவது மக்களவை தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. குறிப்பாக வாக்காளர்கள் பட்டியல் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வரை, இந்தியாவில் உள்ள மொத்த வாக்காளர்கள் பற்றிய புள்ளி விவரத்தை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

அதன்படி, 18ஆவது மக்களவைத் தேர்தலில் 96.88 கோடி பேர் (இந்த எண்ணிக்கை கடந்த மக்களவைத் தேர்தலை விட 6 % அதிகம்.) வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதில் 49 கோடியே 72 லட்சத்து 31 ஆயிரத்து 994 பேர் ஆண்கள். 47 கோடியே 15 லட்சத்து 41 ஆயிரத்து 888 பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் 48 ஆயிரத்து 44 பேர் உள்ளனர்.

புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 63 லட்சம் பேர். அதில் ஆண்கள் 1.22 கோடி, பெண்கள் 1.41 கோடி.

இந்த புதிய வாக்காளர் பட்டியலில் ஒரு கோடியே 84 லட்சத்து 81 ஆயிரத்து 610 பேர் பத்தொன்பது வயதுக்கு உட்பட்டவர்கள். 19 கோடியே 74 லட்சத்து 37 ஆயிரத்து 160 பேர் 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள். ஒரு கோடியே 85 லட்சத்து 92 ஆயிரத்து 918 பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்

வாக்காளர் பட்டியலின்படி பாலின விகிதாச்சாரம் 948 ஆக உயர்ந்துள்ளது. 2023ஆம் ஆண்டு இது 940 ஆக இருந்தது.

ஒரு கோடியே 65 லட்சத்து 76 ஆயிரத்து 654 பேர் நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com