வைர வர்த்தக மைய கட்டடம் - சூரத்
வைர வர்த்தக மைய கட்டடம் - சூரத்

அமெரிக்க ராணுவத் தலைமையகத்துக்கு சவால் விடும் குஜராத்திகள் !

அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பென்டகன் தான் இதுவரை உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டடமாக இருந்தது. தற்போது அதை முறியடித்துள்ளது சூரத் நகரில் கட்டப்பட்டுள்ள வைர வர்த்தக மைய கட்டடம். பெண்டகனுக்கு சவால் விட்டு ‘பெண்டு’ நிமித்தி உள்ளனர் குஜராத்திகள்.

இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் திகழ்கிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்கு தான் வெட்டப்பட்டு, பட்டை தீட்டப்படுகிறது. இந்த தொழிலில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து செயல்படும் விதத்தில் தான் சூரத் வைர வர்த்தக மைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

அந்த கட்டடமானது 35 ஏக்கர் நிலப்பரப்பில், 15 மாடிகளைக் கொண்ட 9 செவ்வக வடிவ அமைப்புகளாக கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடங்களை இணைக்கும் முதுகெலும்பு போல ஒரு மைய கட்டிடம் அமைந்திருக்கிறது. இந்த அலுவலக கட்டிட வளாகத்தின் மொத்த தள பரப்பளவு 660,000 சதுர மீட்டர் ஆகும். பென்டகன் கட்டடத்தின் மொத்த பரப்பளவு 600,000 சதுர மீட்டர் மட்டுமே. சுமார் 80 ஆண்டுகளாக உலகிலேயே மிகப் பெரிய அலுவலக கட்டிடமாக இருந்த பென்டகனை சூரத் வைர வர்த்தக மைய கட்டிடம் முந்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த கட்டடக் கலை நிறுவனமான மார்போஜெனிசிஸ், சுமார் 4 ஆண்டுகளில் இந்த கட்டடத்தை கட்டி முடித்துள்ளது. மொத்த பட்ஜெட் ரூ.3 ஆயிரம் கோடி. இந்த கட்டடத்தில் 131 மின்தூக்கிகள், 4,0000 சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அதேபோல், மாநாட்டு அரங்குகள், மீட்டிங் ஹால், உணவு விடுதிகள், வங்கி, சர்வதேச மாநாட்டு மையம், ஐந்து நட்சத்திர விடுதிகள், தேசிய வைர ஆராய்ச்சி மையம் போன்றவை உள்ளன.

வருகிற நவம்பர் மாதம் இந்த அலுவலக கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.'இந்த கட்டிடம், சூரத் வைரத் தொழில்துறையின் ஆற்றல், வளர்ச்சியைக் காட்டுகிறது. இந்திய தொழில்முனைவு ஊக்கத்தின் அத்தாட்சியாகவும் திகழ்கிறது' என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com