ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டா

தமிழக பா.ஜ.க.வினர் மீது அச்சுறுத்தல்: குழு அமைத்த ஜே.பி.நட்டா!

தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டது தொடர்பாக ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை பனையூரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே கொடிக் கம்பம் நடப்பட்டது தொடர்பான விவகாரத்தில் அமர் பிரசாத் ரெட்டி உட்பட 6 பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உத்தரவின் பேரில் தேசிய பொதுச் செயலாளர் அர்ஜுன் சிங் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தமிழக அரசு தமிழக பா.ஜ.க.வினர் மீது காவல் துறையினை ஏவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவது குறித்து நேரில் சென்று விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் முன்னாள் முதலமைச்சர் சதானந்த கவுடா, எம்.பி சத்ய பால் சிங், ஆந்திரா பாஜக தலைவர் புரந்தேஸ்வரி, பாஜக எம்.பி மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், "ஊழல் நிறைந்த தி.மு.க. அரசின் கொடூரமான நடத்தைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் 4 பேர் கொண்ட தூதுக்குழு அமைத்துள்ளதற்கு நமது தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு தமிழ்நாடு பா.ஜ.க. சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

1. தமிழ்நாடு பாஜகவின் சமூக ஊடக நிர்வாகிகள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு, அற்பமான குற்றச்சாட்டுகள் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட சட்டப் பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

2. பெரும்பாலான வழக்குகள் உள்ளூர் தி.மு.க. செயல்பாட்டாளர்களால் தாக்கல் செய்யப்படுகின்றன. ஊழல் திமுக அமைச்சர்களின் ஈகோவை திருப்திப்படுத்த காவல்துறை கைது செய்ய அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

3. நள்ளிரவு அல்லது அதிகாலையில் கைது செய்வது, 41ஏ சம்மன் அனுப்பாதது, ஜாமீன்கோரிம் அற்பமான குற்றச்சாட்டுகளை சுமத்துவது, வார இறுதி நாட்களில் அல்லது நீண்ட அரசு விடுமுறைக்கு முன் அவர்களை கைது செய்வது இந்த கொடூர தி.மு.க. அரசின் செயல்பாடாகும்.

4. சமூக ஊடகங்களில் பிரபலமானவர்களைக் குறிவைத்து கைது செய்வதில் தி.மு.க. அரசு குறியாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் தாக்கல் செய்யும் உண்மையான புகார்களை கண்டுகொள்வதில்லை.

கடந்த 30 மாதங்களில் இந்த தி.மு.க அரசாங்கத்தின் அத்துமீறல்களையும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததையும் இந்த குழு வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் என்று நாங்கள் நம்புகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com