அதானி குழுமம்
அதானி குழுமம்

அதானி குழுமத்தின் மீது புதிய குற்றச்சாட்டு - ஹிண்டன்பர்க் விவகாரம் போலவா?

அதானி குழுமத்தின் மீது ஓசிசிஆர்பி அறிக்கை என்ற பெயரில் புதிய மோசடிக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எட்டு மாதங்களுக்கு முன்னர் ஹிண்டன் பர்க் குழுவினர் வெளியிட்ட அறிக்கையை அடுத்து, இந்த அறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அமைப்பாக்கப்பட்ட குற்றங்கள், ஊழல்களைச் செய்தியாக்கும் திட்டம் - Organised Crime and Corruption Reporting Project (OCCRP) என்கிற பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அதானி குழுமம் பொதுவான பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் பங்குகளில் முறைகேடாக கூடுதல் பணம் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி குடும்பத்துடன் தொடர்புடைய வர்த்தகக் கூட்டாளிகள் இடம்பெற்றுள்ள - மொரிசியஸ் தீவு வழியாக வந்த இந்த முதலீட்டில், முதலீட்டாளர் விவரம் வெளித்தெரியாமல் மறைக்கப்பட்டு இருக்கும் என்றும் ஓசிசிஆர்பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஹிண்டன்பர்க் குழுவின் அறிக்கையில், அதானி குழுமம் பங்குச்சந்தை மதிப்பை ஒன்றுக்குப் பத்தைப்போல பல மடங்கு கூட்டிக் காண்பித்து மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. ஒரு கூட்டத்தொடர் முழுவதும் நடக்கவியலாதபடி அதானி குழுமப் பிரச்னை பெரிதானது. நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாரணைக்கு அனுப்பும்படி எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கையை, மத்திய அரசாங்கம் நிராகரித்தது.

அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு அதானி குழுமம் எந்தத் தவறையும் செய்யவில்லை என்று கருத்து தெரிவித்தது.

இதனிடையே, மக்களவையில் இதைப் பற்றிப் பேசிய ராகுல்காந்தியின் பேச்சு பரவலான கவனத்தைப் பெற்றது. அதன்பிறகு, மீண்டும் அதானி குழுமத்தின் மீது இப்போது புகார் எழுந்துள்ளது.

இந்தப் புகாரையும் முற்றிலும் நிராகரிப்பதாக அதானி குழுமம் மறுத்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்னர் வருவாய் புலனாய்வுத் துறை மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையிலான தகவல்களே இந்த அறிக்கையில் உள்ளதாகவும் அந்தக் குழுமம் வெளியிட்ட விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com