அதானி குழுமம்
அதானி குழுமம்

ஹிண்டன்பர்க்கின் அறிக்கை தவறானது- அதானி குழுமம் விளக்கம்!

Published on

ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் தவறானவை, உள்நோக்கம் கொண்டவை என அதானி குழுமம் விளக்கமளித்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஹிண்டன்பர்க். இந்த நிறுவனம் உலகின் பெரும் நிறுவனங்களில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். இதன் அறிக்கைகள், மோசடிகளை அம்பலப்படுத்துவதிலும், முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவின் அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிக்கை வெளியிட்டது. இதன் விளைவாக, அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்தன. இதனால் அதானி குழுமத்திற்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது.

எனினும் ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அதானி குழுமத்தின் மீதான வழக்கை செபி எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கட்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதற்கிடையே, ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் நேற்று எக்ஸ் தளத்தில் "விரைவில் இந்தியாவில் பெரிய சம்பவம் நடைபெற இருக்கிறது" என பதிவிட்டது.

இந்த நிலையில், அதானி குழும ஊழல் புகாரில் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில், இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை கட்டுப்பாட்டு ஆணையமான செபியின் தலைவர் மாதபி புரி புச் தனது கணவருடன் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வாங்கியிருந்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது. இது தொடர்பாக அதானி குழுமம் அளித்துள்ள விளக்கத்தில்:

“எங்களுடைய வெளிநாட்டு முதலீடுகள், பங்குகள் முழு வெளிப்படைத் தன்மையுடன் உள்ளன. இது தொடர்பான அனைத்து விவரங்களும் பல்வேறு பொதுத்துறை அறிக்கைகளில் இணைக்கப்பட்டுள்ளதன் மூலம் இதனை அறிந்துகொள்ளலாம். அதானி குழுமத்துக்கு எந்தவொரு தனிநபருடனும், எவ்வித வணிக ரிதியான தொடர்புமில்லை.

ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ள அறிக்கை போலியானது, தவறானது , புனையப்பட்டது. பொதுவெளிகளில் உள்ள தகவல்களை திரட்டி உண்மையாக ஆராயாமல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தங்களின் சுய லாபத்துக்காக ஹிண்டர்பர்க் அறிக்கை தயாரித்து வெளியிடப்பட்டுள்து. ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரிக்கிறோம். கடந்த காலங்களில் முழுமையாக விசாரிக்கப்பட்டு, எவ்வித குற்றமோ முறைகேடோ நடைபெறவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டிருந்த விஷயங்களை ஹிண்டர்பர்க் மீண்டும் வெளியிட்டுள்ளனர்.

இவையனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்று உச்ச நீதிமன்றத்தால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பளித்துள்ளது.” என கூறப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com