சொன்ன சொல்லைக் காப்பாற்றிய அரசியல்வாதி… யாரென்று தெரியுமா?
பவன்கல்யாண் வெற்றி பெற்றால் தன்னுடைய பெயரை மாற்றிக் கொள்வதாக சவால்விட்டிருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஒருவர், சொன்னபடியே செய்து காட்டியுள்ளார்.
காப்பு சமூகத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான முத்ரகடா பத்மநாபம், கடந்த மார்ச் மாதம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் பவன் கல்யாண் வெற்றிப் பெற்றால், தன் பெயருடன் ரெட்டி என்ற குடும்ப பெயரை சேர்த்துக்கொள்வதாக சவால் விட்டிருந்தார் முத்ரகடா பத்மநாபம். (காப்பு இனத்தவர்கள் வேறு; ரெட்டிகள் வேறு)
காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பித்தாபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன்கல்யாண், 65000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னர் கொடுத்த வாக்கினை நிறைவேற்றும் விதமாக, முத்ரகடா பத்மநாபம் என்ற தன் பெயரை முத்ரகடா பத்மநாபம் ரெட்டி என்று அதிகாரப்பூர்வமாக மாற்றிக் கொண்டுள்ளார்.
தேர்தலுக்கு கொடுத்த வாக்குறுதிகளையே, நிறைவேற்ற தவறும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், சொன்ன சொல்லைக் காப்பாற்றிய முத்ரகடா பத்மநாபம் ரெட்டி வித்தியாசமான அரசியல்வாதிதான்.