கஜேந்திரசிங் ஷெகாவத்
கஜேந்திரசிங் ஷெகாவத்

சனாதனம்... நாக்கைப் பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம்! – மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்

சனாதனத்துக்கு எதிராக பேசினால் நாக்கை பிடுங்குவோம் கண்ணை நோண்டுவோம் என்று மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் மிரட்டல் விடுத்துள்ளார்.

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சமூகநீதிக்கு எதிராக இருக்கும் சனாதனத்தை ஒழிப்போம் என்று கூறியிருந்தார். இதற்கு பா.ஜ.க.வினரும் வலதுசாரி அமைப்பினரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சர்ச்சைக்குரிய வகையில் இன்று பேசியுள்ளார்.

ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், “நம் முன்னோர்கள் உயிரைப் பணயம் வைத்து பாதுகாத்து வந்த சனாதனத்தை முடிவுக்கு கொண்டு வர சிலர் முயல்கின்றனர். இனி நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். சனாதனத்துக்கு எதிராக பேசினால் நாக்கை பிடுங்க வேண்டும்; கண்ணை நோண்ட வேண்டும். சனாதனத்திற்கு எதிராக பேசும் யாரும் அரசியல் அதிகாரத்தையும் அந்தஸ்தையும் நிலைநாட்ட முடியாது." என்று பேசினார்.

மேலும், “சனாத தர்மத்தை யாராலும் ஒழிக்க முடியாது. சனாதனத்தை விமர்சித்துப் பேசும் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா, நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் ஹிரோக்கள் அல்ல; வில்லன்கள்.

சனாதனத்தை மலேரியா, டெங்கு, எய்ட்ஸ் போன்ற நோய்களுடன் ஒப்பிட்டுப் பேசியவர்கள், அந்த நோய்களின் துன்பத்தை அனுபவிக்க வேண்டும். இதுவே என் பிரார்த்தனை” என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com