கிளிமூக்கு மாம்பழ விவசாயிகளுக்கு மத்திய அரசு இப்படியொரு உதவி!

Totapuri mangoes
கிளிமூக்கு மாம்பழங்கள்
Published on

குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் மாம்பழ வகைகளைப் பொறுத்தும், அதில் பயன்படுத்தப்படும் பழக்கூழின் அளவைப் பொறுத்தும் அதற்கான ஜி.எஸ்.டி. விலையை நிர்ணயிக்க மத்திய வேளாண் அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லக்னோவில் உள்ள மத்திய மிதவெப்பமண்டல தோட்டக்கலை நிறுவனத்தின் இயக்குநர் டி. தாமோதரன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்தக் குழு, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கிளிமூக்கு மாம்பழங்கள் சந்தித்து வரும் கடும் விலைச் சரிவை குறித்து ஆய்வுசெய்ய நியமிக்கப்பட்டது.

இந்தக் குழு, தனது அறிக்கையை மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹானிடம் சமர்ப்பித்தது. குழுவின் பரிந்துரைகள் குறித்து அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனைகளைத் தொடங்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மைக் காலமாக கிளிமூக்கு மாம்பழங்களின் விலை தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், இந்த முயற்சியை வேளாண்மைத் துறை முன்னெடுத்துள்ளது.

விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், குளிர்பானங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், அதிக பழங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சுவையூட்டப்பட்ட குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் மாம்பழ வகைகளைப் பொறுத்து ஜி.எஸ்.டி. சலுகை ஒதுக்கப்படும்.

மேலும்,  குளிர்பானங்களில் 22-25% மாம்பழக் கூழ் பயன்படுத்தியிருந்தால் மட்டுமே 5% ஜி.எஸ்.டி சலுகை விலை கிடைக்கும்.  

இதுபோன்ற நிபந்தனைகளுக்கு உட்படாத குளிர்பானங்களுக்கு அதிகப்படியான  ஜி.எஸ்.டி. தொகை விதிக்கப்படும் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

மேலும், தென்மாநிலங்களில் இதன் விளைச்சல் சில இடங்களில் குறைவாக உள்ளன. இதை அதிகரிக்க தாவரவியல் இனப்பெருக்க முறைகளில் ஒன்றான ஒட்டுதல் போன்றவற்றை பயன்படுத்த விவசாயிகளுக்கு இந்தக் குழு அறிவுறுத்துகின்றது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com