
விமானப் போக்குவரத்து மூலமாக வெளியேற்றப்படும் கார்பனைக் குறைக்க பசுமை விமானத் திட்டத்தை உருவாக்க ஏர் இந்தியா, ஏர்பஸ் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.
அண்மையில், தில்லியில் நடைபெற்ற இந்திய விமான எரிபொருள் உச்சி மாநாட்டில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ராம்மோகன் நாயுடு முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியாவில் வரும் 2040ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 1 கோடி டன் பசுமை விமான எரிபொருளை உற்பத்தி செய்யும் திறன் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், 2027ஆம் ஆண்டு ஜனவரி முதல் சர்வதேச விமான எரிபொருளில் 1% பசுமை எரிபொருள் கலப்பதை மத்திய அரசுக் கட்டாயமாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்காக அரியானாவின் பானிபட் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து வணிக ரீதியாக பசுமை விமான எரிபொருளை விநியோகிக்க இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தக் கலப்பு விகிதத்தை 2030-க்குள் 5%ஆகவும், நீண்டகால அடிப்படையில் 20% வரையிலும் உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 7.95 லட்சம் கோடி முதலீடு தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.