மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக சரத்பவாரின் தேசிய வாத காங்கிரஸிலிருந்து அஜித் பவார் உள்ளிட்டவர்கள், ஜூலை 2 அன்று, அணி மாறி, ஆளும் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே வேகத்தில் அஜித் பவாருக்கு சிவசேனா – பாஜக கூட்டணியில் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டதோடு அவரைச் சேர்ந்த 8 முக்கிய தேசியவாத காங்கிரஸ் தலைவர்களும் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டனர். அஜித்பவார் தன் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினாலும் 36 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அவருக்கு இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
83 வயதாகும் சரத்பவார் கடந்தமாதம் தான் கட்சித்தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாகவும் தேர்தலில் இனி நிற்கப் போவது இல்லை என்றும் சொல்லி இருந்தார். ஆனால் கட்சியில் தனக்கு அடுத்தபடியாக யார் என்பதற்கு அவர் யாரையும் சுட்டவில்லை. தன் அண்ணன் மகன் அஜித்பவார், தன் மகள் சுப்ரியா சுலே, பேரன் ரோகித் பவார் என பலரை சுற்றி வைத்திருக்கும் சரத்பவார் கட்சிக்குள் குடும்ப உறுப்பினர்களின் அரசியல் பலப்பரீட்சையை எதிர்கொண்டு இப்போது கட்சி பிளவு படுவதை எதிர்கொண்டுள்ளார்.
ஏற்கெனவே மும்பை அரசியலில் சிவசேனா ( ஷிண்டே)- பாஜக கூட்டணியில் முதல்வர் ஷீண்டேவுக்கும் துணை முதல்வர் பத்னாவிஸுக்கும் ஒத்துப்போகவில்லை என்றும் ஷிண்டே நீக்கப்பட்டு அஜீத் பவாரை அந்த இடத்துக்கு பத்வானாவிஸ் இழுத்து வருவார் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
இதே தியரியைத் தான் உத்தவ்தாக்கரே நடத்தும் சாம்னாவும் திங்கள் அன்று கூறி இருக்கிறது.
ஆனால் சரத்பவார் ஆசியோடுதான் இந்த கட்சித் தாவல் நடவடிக்கையையே அஜித் பவார் மேற்கொண்டுள்ளார் என்றொரு நம்ப முடியாத தகவலும் உள்ளது.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார். ‘1980களில் எட்டுபேர் தவிர எல்லா எம்.எல்.ஏக்களும் என்னை விட்டு விலகிச் சென்ற சம்பவம் நடந்தது. அப்போது நான் மறுபடியும் கட்சியைக் கட்டி எழுப்பினேன். இப்போதும் அதே போல் செய்வேன்’ என்று கூறி இருக்கிறார்.