
மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் சென்ற விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அவர் உயிரிழந்ததாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், விமானத்தில் பயணித்த 2 விமானிகள், அஜித் பவாரின் பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் உள்ளிட்ட அனைவரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் பல கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், தனது சொந்த ஊரான புணே மாவட்டம் பாராமதியில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக இன்று காலை தனி விமானம் மூலம் அஜித் பவார் புறப்பட்டுள்ளார்.
பாராமதி விமான நிலையத்தில் அஜித் பவார் சென்ற விமானம் இன்று காலை 8.45 மணியளவில் தரையிறங்க முயற்சித்தபோது, நிலைத் தடுமாறி தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் விமானம் தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அஜித் பவார் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது.