அஜித் பவார் மரணம்… அரசியல் தலைவர்கள் இரங்கல்!

அஜித் பவார்
அஜித் பவார்
Published on

மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் மரணத்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் சிறிய ரக தனி விமானத்தில் சென்று கொண்டிருந்தார். பாராமதி பகுதி அருகே தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது.

இந்த கோர விபத்தில் அஜித் பவார் உட்பட, விமானத்தில் பயணித்த அவரது பாதுகாவலர்கள் 2 பேர் மற்றும் விமானிகள் 2 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். அஜித் பவாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குடியரசு தலைவர் திரெளதி முர்மு

விமான விபத்தில் மராட்டிய மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உள்ளிட்ட பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. அஜித் பவாரின் அகால மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்த மற்ற அனைவரின் குடும்பங்களுக்கும் இந்த துயரத்தை தாங்கும் வலிமையை கடவுள் வழங்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி

மராட்டிய மாநிலம் பாராமதியில் நடந்த விமான விபத்து வேதனையளிக்கிறது. விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வலிமையையும், தைரியத்தையும் வழங்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.

அஜித் பவார் மக்கள் தலைவராக இருந்தார். கட்சியின் அடிமட்டம் வரை வலுவான தொடர்பை கொண்டிருந்தார். கடின உழைப்பாளியாகவும், மராட்டிய மக்களுக்கு சேவை செய்வதில் முன்னணியில் இருந்த ஆளுமையாகவும் அவர் மதிக்கப்பட்டார். அவரது அகால மறைவு மிகவும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விமான விபத்தில் மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் உள்பட 5 பேர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த துயர விபத்தை ஜீரணிப்பது கடினமாக உள்ளது. உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நயினார் நாகேந்திரன்

இந்திய அளவில் நமது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் மரணம் அடைந்தார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவர் குடும்பத்தார்,கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொண்டு அவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி!

இவர்கள் உட்பட ஏராளமான அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com