ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

இப்போது எது முக்கியம்...? மம்தா சந்தேகத்துக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்!

“நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. எதிர்த்து போராட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்” என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் திரிணமூல் காங்கிரஸ் - காங்கிரஸ் இடையே மோதல் நாளுக்கு நாள் வலுத்துவருகிறது.

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற தர்ணாவில் கலந்து கொண்ட திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பேசுகையில், “மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 300 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று நான் முன்மொழிந்தேன். ஆனால் அவர்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை. இப்போது மேற்குவங்கத்தில் முஸ்லிம் வாக்குகளைக் குறிவைத்து பயணிக்கின்றனர். வரும் மக்களவைத் தேர்தலில் அவர்கள் 40 தொகுதிகளையாவது கைப்பற்றுவார்களா என்று சந்தேகப்படுகிறேன்.” என்று மம்தா கூறியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக, ஜார்க்கண்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

“மம்தா பானர்ஜி இன்னும் இந்தியா கூட்டணியில்தான் உள்ளார் என்று நினைக்கிறோம். நடக்க இருப்பது மக்களவை தேர்தல். சட்டப்பேரவை தேர்தல் கிடையாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மாநில அளவில் நமக்கிடையே இருக்கும் மாற்றுக் கருத்துகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தேசிய கண்ணோட்டத்தில் சிந்திக்க வேண்டும். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் கொள்கைக்கு எதிராக போராடுவதுதான் நமது ஒரே இலக்கு. இந்தியா கூட்டணியை பலப்படுத்த வேண்டியது நம் அனைவரது கடமை. அதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்றவர், பாரத் ஜோடோ நியாய யாத்ரா உத்தரப் பிரதேசத்தில் 11 நாள்கள் நடைபெற உள்ளது என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com