தமிழிசையைக் கண்டிக்கும் அமித் ஷா
தமிழிசையைக் கண்டிக்கும் அமித் ஷா

மேடையில் தமிழிசையைக் கண்டித்த அமித் ஷா!

ஆந்திர மாநில அமைச்சரவை பொறுப்பேற்பு விழா மேடையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடிந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும் தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன், இந்த மக்களவைத் தேர்தலில் தென்சென்னையில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவரை தி.மு.க.வின் தமிழச்சி தங்கபாண்டியன் 2 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அதையடுத்து, தமிழிசை மீண்டும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் பதவிக்கு வருவார் எனப் பேச்சு எழுந்தது. அதையொட்டி அவரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறித்து பூடகமாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா, கன்னாவரத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர்கள் சிரஞ்சீவி, ரஜினிகாந்த், ராம் சரண் உட்பட்ட பலரும் பங்கேற்றனர்.

விருந்தினராக அழைக்கப்பட்டு விழா மேடைக்கு வந்த தமிழிசை, வெங்கையா நாயுடு, அமித்ஷா ஆகியோருக்கு வணக்கம் செலுத்தினார். அப்போது தமிழிசையைக் கைகாட்டி அழைத்த அமித்ஷா, இறுக்கமான முகத்துடன் ஏதோ சொல்ல, அதற்கு தமிழிசை விளக்கம் கொடுக்க முயன்றார்.

உடனடியாக, அதை மறுத்த அமித் ஷா, தமிழிசையிடம் கண்டிப்புடன் மீண்டும் ஏதோ கூற, நேரலையாக தொலைக்காட்சிகளில் பதிவான இந்தக் காட்சி, சமூக ஊடகத்தில் தீயாய்ப் பரவி வருகிறது.

ஏற்கெனவே, தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி தொடர்பாக அண்ணாமலைக்கும் தமிழிசைக்கும் போட்டி நிலவுவதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com