ஜாமினில் வெளியே வந்த சந்திரபாபு
ஜாமினில் வெளியே வந்த சந்திரபாபு

சந்திரபாபுவின் ஜாமின் உத்தரவு விவரம் என்ன?

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபுவுக்கு மருத்துவக் காரணங்களுக்காக நான்கு வார இடைக்காலப் பிணை வழங்கி ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்திரபாபுவின் ஆட்சிக்காலத்தில் (2014-19) அந்த மாநில திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.118 கோடி ஊழல் செய்யப்பட்டதாகவும் அதில் சந்திரபாபுவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் முதலமைச்சர் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக சி.ஐ.டி. போலீஸார் 2021ஆம் ஆண்டே வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் சந்திரபாபு கடந்த மாதம் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார். விஜயவாடா ஊழல்தடுப்பு நீதிமன்ற உத்தரவுப்படி ராஜமுந்திரி மத்திய சிறையில் அவர் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஜாமின் கோரி ஊழல் தடுப்பு வழக்குகள் நீதிமன்றத்தில் சந்திரபாபு தரப்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் பிணை கோரி மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், மருத்துவக் காரணங்களுக்காக சந்திரபாபுவுக்கு 4 வார இடைக்கால பிணை வழங்கி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

அவர், பிணை முடிந்து, நவம்பர் 28ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சிறைக் கண்காணிப்பாளரிடம் சரணடைய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

53 நாள்கள் சிறைவாசத்திற்குப் பிறகு வெளியே வந்த சந்திரபாபுவை, அவரின் குடும்பத்தினரும் கட்சியினரும் வரவேற்றனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com