மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை தில்லி நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உட்பட 6 பேர், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பா.ஜ.க. முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது கடந்த 2023ஆம் ஆண்டு, பாலியல் துன்புறுத்தல் புகாரை அளித்தனர்.
புகார்களின் அடிப்படையில், பிரிஜ் பூஷண், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் உதவிச் செயலராக இருந்த வினோத் தோமர் ஆகிய இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
புகார் அளித்தவர்களில் ஒருவர் மைனர் என்பதால், போக்சோ சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விசாரணைக்கு இடையே, சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்ததாகக் கொடுத்த புகார் பொய்யானது என்று சிறுமியின் தந்தை கூறினார். இதனால், கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதம் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகியிருந்த வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த வழக்கை இன்று விசாரித்த தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம், மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால், பிரிஜ் பூஷண், வினோத் தோமர் ஆகிய இருவரையும் வழக்கில் இருந்து விடுவிப்பதாக உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
பிரிஜ் பூஷண் குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது வருத்தமளிக்கிறது என்று கூறினார்.
ஒட்டுமொத்த அரசு இயந்திரம், அரசாங்கம், நிர்வாக அமைப்பு ஆகியவை பிரிஜ் பூஷனைப் பாதுகாக்கும் வகையிலேயே செயல்பட்டு வரும் நிலையில், மல்யுத்த வீரர்கள் நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து போராடுவோம் என்றும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து விரைவில் மேல்முறையீடு செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.