“சிறையில் மீண்டும் கூடுதலாகத் துன்புறுத்தப்படலாம்!” – அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு பேட்டி
“சிறையில் மீண்டும் கூடுதலாகத் துன்புறுத்தப்படலாம்” என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த சில நாள்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.
இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:
“எனது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மிக மோசமான நோய்க்கான அறிகுறிகள் தெரிவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இன்னும் எத்தனை காலம் சிறையில் இருப்பேன் என்று எனக்குத் தெரியவில்லை. சர்வாதிகாரிகளிடமிருந்து இந்த நாட்டைக் காப்பாற்ற தான் சிறைக்குச் செல்ல தயாராக இருக்கிறேன்.
என்னை அழிக்க, என்னை மௌனமாக்க அவர்கள் பல வழிகளைக் கையாள்கிறார்கள். ஆனால், அதில் அவர்கள் வெற்றி பெறப்போவதில்லை. நான் சிறையில் இருந்த போது, என்னை பல வழிகளில் துன்புறுத்தினார்கள். எனக்கு மருந்து கொடுக்காமல் தடுத்தனர், இவர்களுக்கு என்னதான் வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை.
நான் சிறைக்குச் சென்றபோது எனது உடல் எடை 70 கிலோ. ஆனால் இப்போது 64 கிலோ. நான் பிணையில் விடுதலையான பிறகும் கூட எனது உடல் எடை கூடவில்லை.
எனக்கு உச்ச நீதிமன்றம் அளித்த 21 நாள் பிணை நாளை மறுநாளுடன் முடிகிறது. நான் மீண்டும் திகார் சிறைக்குத் திரும்புகிறேன், மாலை 3 மணியளவில் என்னுடைய வீட்டிலிருந்து புறப்படுவேன், இன்னும் இந்த முறை என்னை கூடுதலாக துன்புறுத்துவார்கள், ஆனால், அவர்களுக்கு நான் அடிபணிய மாட்டேன்.” என்று கெஜ்ரிவால் கூறினார்.