அசாமில் உணவகங்கள், ஓட்டல்கள், பொது விழாக்கள் மற்றும் சமுதாய நிகழ்வுகளில் மாட்டிறைச்சி பரிமாறவும், சாப்பிடவும் அம்மாநில பாஜக அரசு தடை விதித்து உள்ளது.
இது தொடர்பாக அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது:
“அசாமில், முன்பு கோவில் அருகே மாட்டிறைச்சி சாப்பிட தடை விதிக்கப்பட்டு இருந்தது. இனிமேல், உணவகங்கள், ஓட்டல்கள், பொது இடங்கள், பொது நிகழ்ச்சிகளில் மாட்டிறைச்சி பரிமாற தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். இதனால், இந்த இடங்களில் இனிமேல் அதனை சாப்பிட முடியாது. இதற்கான முடிவு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
கடந்த சில நாள்களாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மாட்டிறைச்சி குறித்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். மாட்டிறைச்சி வேண்டாம் என்ற கருத்தை மக்களிடம் தெரிவித்தனர். அமைச்சரவை கூட்டத்தில் அவர்களின் அறிக்கையை விரிவாக விவாதித்தோம். அதில், தற்போது உள்ள மாட்டிறைச்சி தடை சட்டத்தில், சமுதாய நிகழ்வுகள், உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில் தடை குறித்து போதுமான சட்டங்கள் ஏதும் இல்லை.
இதனையடுத்து புதிய சட்டத்தில், இந்த விதிகளை சேர்த்தோம். இது சட்டத்தை வலுப்படுத்துவதுடன், காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியது முன்னெடுக்கப்பட்டு உள்ளது. இதனால், இச்சட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என நம்புகிறோம். இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறினார். மாநில பாஜக அரசின் இந்த முடிவுக்கு இஸ்லாமியத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.